பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களை தமிழகத்தின் சிறந்த மருத்துவ கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக சிறந்த பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், அரசு பள்ளிகளில் பயிலும், ஏழை எளிய மாணவர்களும் மருத்துவர்களாகவும், பொறியாளர்களும் பயின்று கனவு நனவாக முன்னாள் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது கொண்டு வந்தார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவம்-30, சிறப்பு பொறியியல்-30, என்ற பெயரில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சூப்பர் 30 என்ற பெயரில் வகுப்புகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன்படி, இன்று நடைபெற்ற நுழைவுத் தேர்வில் மொத்தம் 303 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
இத்தேர்வு எழுதியவர்களில் உயிரியல் பிரிவிற்கு 52 மாணவ மாணவிகளும், கணிப்பொறி அறிவியல் பிரிவிற்கு 30 மாணவ, மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு வகுப்புகளில் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்து வரும் நன்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களும் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாடத்துடன் தன்னம்பிக்கையூட்டும் மனவளப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தேர்வில் கலந்துகொள்ள இயலாத மாணாக்கர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் 26.5.2017 மற்றும் 29.5.2017 ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சூப்பர்-30 வகுப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த மேல்நிலைப் பொதுத் தேர்வில் கமலி என்ற மாணவி பொறியியல் படிப்பிற்கான கட்-ஆப் மார்க் பிரிவில் 199.25 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.