Forest biennial festival in Perambalur
பெரம்பலூர் : இந்தியாவில் வன உயிரின வார விழா, 1952ம் ஆண்டு முதல் வருடந்தோறும் அக்டோபர் மாதத்தில் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் வன உயிரின விழாவின் நோக்கம் வன உயிரினங்கள் அழிவதிலிருந்து பாதுகாப்பதற்கும், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்குமே ஆகும்.
வன விலங்குகளை பாதுகாப்பது குறித்து மாணவ – மாணவியர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் வன உயிரியல் வார விழா கொண்டாடும் பொருட்டு மாணவ – மாணவியர்கள் கற்கும் பருவத்தில் வன உயிரினங்களை பற்றி அறிந்துகொள்ளவும், அதன் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு பற்றி தெரிந்துகொள்ளவும், பேச்சுப்போட்டி மற்றும் ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டும் போட்டி நடத்தப்பட்டது.
நமது தேசப்பிதா மகாத்மா காந்தி ஓர் அகிம்சைவாதியாதலால், அவரை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி இவ்விழா ஆரம்பிக்கப்பட்டு 8ம் தேதி முடிக்கப்படுகிறது.
நாம் வாழ வன உயிரினங்கள் வாழ்வது மிக அவசியம். ஏனெனில் அவை நம் உயிர் சூழல் தொகுப்பின் ஓர் அங்கம். எனவே மக்கள் வன உயிரினங்களை பாதுகாத்தும், அவற்றின் அழிவிற்கு துணை போகாமலும் இருக்கவேண்டும்.
மேலும் வன உயிரினங்களின் வாழ்விடங்களான தாவரங்களை நாம் பேணி பாதுகாப்பது நமது தலையாயக் கடமை என்ற கருத்தினை வெளிப்படுத்துவதே இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும்.
வன உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு வன உயிரின சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், பூகோளக் காப்பகங்கள் மற்றும் மிருகக் காட்சி சாலை ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன, என விழாவில் மாணவர்களுக்கு எடுததுரைக்கப்ட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச்சுப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் 08.10.2017ம் தேதி கிண்டி வன உயிரியல் பூங்காவில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் மோகன்ராம், கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, காவல் துறை கண்காணிப்பாளர் (மங்களமேடு உட்கோட்டம்) ஜவஹர்லால், வனவியல் விரிவாக்க அலுவலர் இளங்கோவன், வனச்சர அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.