If your hands are clean, you can prevent many ailments: Namakkal collector advice to the students

நாமக்கல் : சுத்தமாக கைகளை வைத்திருந்தால் வயிற்றுப்போக்கு, நிமோனியா உள்ளிட்ட பல வியாதிகளை தடுக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அடுத்துள்ள அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக கைகழுவும் நாள் கொண்டாடப்பட்டது. எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் வரவேற்றார்.

இதில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்து விழாவை துவக்கிவைத்து பேசியதாவது:

கைகளை சுத்தமாக வைத்திருந்தால், வயிற்றுப்போக்கு, நிமோனியா உட்பட பல வியாதிகளைத் தடுக்கலாம். நோய்த்தொற்று வராமல் காக்கலாம். ஆரோக்கியமாக வாழலாம். இவையெல்லாம் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். அதனால்தான் அக்டோபர் 15-ம் தேதியை உலக கை கழுவுதல் தினமாகக் கொண்டாடுகிறார்கள். சுவாசப் பிரச்னைகள் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக இறக்கும் குழந்தைகளின் இறப்பைக் குறைக்கவே ஆரம்பத்தில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.

அதாவது சோப் போட்டு கைகளைக் கழுவினால் இந்த பாதிப்புகளைப் பெருமளவுக்குக் குறைத்துவிடலாம். சோப், கிருமி நாசினியால் கைகளைச் சுத்தமாகக் கழுவுவது எப்படி என்பது ஒரு பிரச்சாரமாகவே மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டது. சாப்பிடுகிறோம், கை கழுவுகிறோம், கழிவறைக்குச் செல்கிறோம், கை கழுவுகிறோம், வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய பிறகும் கால்களையும் கைகளையும் கழுவுகிறோம். ஆனால், அதை முறைப்படி செய்கிறோமா என்று கேட்டால் நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் செய்வது இல்லை என்பதே உண்மை.

அப்படிச் செய்யாத காரணத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். 2008-ம் ஆண்டு குளோபல் பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் ஃபார் ஹேண்ட்வாஷ்அமைப்பு இந்த தினத்தை ஆரம்பித்து வைத்தது. ஐநா பொதுக்குழு 2008-ம் ஆண்டை உலக சுகாதார ஆண்டாக கடைப்பிடித்தது. அதன் ஓர் அங்கமாகத்தான் அக்டோபர் 15-ம் தேதி உலக கைகழுவுதல் தினம் என அறிவிக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என பேசினார். விழாவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஷ் குமார், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆயுஸ் மருத்துவ அலுவலர் டாக்டர் பூபதிராஜா ஆகியோர் கை கழுவும் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனர்.

தாய் சேய் நல அலுவலர் கலைவாணி கை கழுவும் முறை குறித்து விளக்கமளித்தார். இதில் மூலிகைசெடிகள் கண்காட்சி நடைபெற்றது. இந்த விழாவில் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சவீதா, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஜான்சிராணி நன்றி கூறினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!