Government of Tamil Nadu should waive road tax for tourist vehicles! PMK Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை ஊர்தி ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் அடங்குவர். பல வழிகளில் வருவாய் இழப்பையும், வாழ்வாதார பாதிப்புகளையும் எதிர் கொண்டு வரும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நிவாரண உதவியும் வழங்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாகவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளாலும் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை மகிழுந்து, மூடுந்து, உள்ளூர் போக்குவரத்துக்கான சரக்குந்து ஆகியவற்றின் உரிமையாளர்களும், ஓட்டுனர்களும் தான். கடந்த மார்ச் மாதம் 25&ஆம் தேதி ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு இத்தகைய ஊர்திகளை இயக்க முடியவில்லை. ஊரடங்கு ஆணையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, இந்த ஊர்திகள் சார்ந்த தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்பாததால், ஊர்திகளை வாடகைக்கு எடுக்க எவரும் முன்வருவதில்லை. அதனால் அவர்கள் வருவாய் இல்லாமல் வாடுகின்றனர். குடும்பம் நடத்துவதற்கும், அடிப்படைச் செலவுகளுக்கும் கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக ஊர்திகள் இயங்காததால், வாடகை ஊர்திகளின் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களால் ஒரு ரூபாய் கூட வருவாய் ஈட்ட முடியவில்லை. ஊர்திகளுக்காக வாங்கிய கடனுக்கான தவணைக் தொகையையே கட்ட முடியாததால், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிந்தும், கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் வாடும் அவர்களை சாலைவரி கட்டும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல் ஆகும்.

இத்தகைய ஊர்திகளை இயக்குபவர்கள் பெரு முதலாளிகளும் இல்லை. பெரும்பாலும் வாடகை ஊர்திகளை அவற்றின் ஓட்டுனர்கள் தான் வங்கிக் கடன் பெற்று இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதாரமே ஊர்திகளை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வாடகை வருவாய் தான். அந்த வருவாய் கிடைக்காமல் வறுமையில் வாடும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் சிறப்பு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எந்த உதவியும் வழங்காமல், பல்லாயிரக் கணக்கில் சாலைவரியை செலுத்த வேண்டும் என்று கூறுவது நிராயுதபாணியாக இருப்பவர் மீது இரு முனைகளில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானதாக இருக்கும்; அது நியாயமல்ல.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஓட்டுனர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் ஆகும். இவர்களில் பலர் வறுமையையும், வாழ்க்கை சிரமங்களையும் சமாளிக்க முடியாமல் கடந்த சில மாதங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் அவர்களை மேலும் மேலும் பண அழுத்தத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக்கக் கூடாது. எனவே, கொரோனா சூழல் சீரடையும் வரை அனைத்து வகையான வாடகை ஊர்திகளுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!