Government talks; Direct paddy procurement issue; Farmers’ blockade protest postponed; Leader P. R. Pandian’s announcement!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் குறித்து நாளை 27ம் தேதி நீதி கேட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். இதனை அறிந்த தமிழக அரசின் உணவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சத்ய பிரதாசாகு, மற்றும் மேலாண்மை இயக்குனர் சண்முகசுந்தரம் ஆகியோர் இன்று காலை சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

டிஎன்சிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் போராட்ட குழு சார்பில் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு என்ற நிறுவனத்தில் இடைத்தரகர் ஒப்பந்தத்தை செய்து கொண்ட தமிழக அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு அமுருதீன்ஷேக் தாவூத் தலைமையிலான நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு 65 ரூபாய் கையூடாக விவசாயிகளிடம் இடம் பெற்றுள்ளது.

கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்போ, பணியாளர்களோ, தொழில்நுட்பமும் இல்லாத இந்நிறுவனம் கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூபாய் 500 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. சில இடங்களில் கொள்முதல் செய்யாமல் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் பெருமழையால் நனைந்து போய் உள்ளது. எனவே விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கான முழு பொறுப்பேற்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்வர வேண்டும். கொள்முதல் வேண்டிய நெல்லை உடன் கொள்முதல் செய்வதற்கும் அதனை உடனடியாக அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தனக்கு எந்த கொள்முதல் கட்டமைப்பும் இல்லாத நிலையில் இடைத்தரகர் முகவராக தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு அமுருதீன் ஷேக் தாவூத் என்பவரை நியமித்துள்ளதால் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது. இவர்களுக்கான கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகைக்கு தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் பொறுப்பேற்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

இதனை தொடர்ந்து மேலாண்மை இயக்குனர் பதிலளிக்கையில் தனியார் இனி கொள்முதல் செய்வதற்கு அனுமதிப்பது இல்லை என தங்களின் கோரிக்கையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஏற்றுக்கொள்வதாகவும்,இதனை அரசிற்கு பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் இதுவரையிலும் கொள்முதல் செய்யப்பட்ட மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 173 மெட்ரிக் டன் நெல் அந் நிறுவனம் கையிருப்பில் வைத்துள்ளது. இதுவரையிலும் தமிழ்நாடு நுகர்பொரு வாணிபக் கழகத்திற்கு 53 ஆயிரத்து 341 மெட்ரிக் டன் அரிசி கொடுத்துள்ளது. சுமார் 210 கோடி ரூபாய் இதற்கான கிரைய தொகையை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தப்படி NCCF மூலம் வழங்கப்பட்டுள்ளது. மீத நெல் எங்கு இருப்பு வைத்துள்ளார்கள் என்கிற கணக்கு வழக்குகளை உடனடியாக கேட்டு பெறப்படும். கொள்முதல் செய்யாமல் நிலுவையில் உள்ள நெல்லை கையகப்படுத்துவதற்கும், கொள்முதல் செய்து அதற்கான உரிய ரசிதுகள் வழங்காமல் உள்ள நெல் குறித்து உரிய கணக்கீடுகளை கையகப்படுத்தி இதற்கான தொகையை வழங்குவதற்கும் தமிழ்நாடு நுகர்பொரு வாணிபக் கழகம் 24 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை மேற்கொள்ளும். அதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கொள்முதல் அதிகாரிகள் அவசர கூட்டத்தை உடனடியாக கூட்டி முடிவெடுக்க உள்ளதாகவும் உத்தரவாதம் அளித்தார்.

ஏற்கனவே, கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 500 கோடி அளவிலான கிரயத் தொகையை 10 தினங்களுக்குள்ளாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே பொறுப்பேற்று வழங்கும் என உறுதி அளித்தார். இதனை ஏற்று நாளை நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்தை 10 தினங்கள் ஒத்திவைத்து ஜூன் மாதம் முதல் வாரம் நடத்த முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

பொதுச் செயலாளர். வி கே வி துரைசாமி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லி ராம், சென்னை மண்டல செயலாளர் ராஜசேகர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் நமச்சிவாயம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!