Gram Sabha meeting in all panchayats in Perambalur district on Oct. 2; Collector Notice!
காந்தி ஜெயந்தி அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது, என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.
மேலும், கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்). ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள் மற்றும் பண்ணை சாரா தொழில்கள் குறித்த கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்)-ஆல் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.