If less rain in the dry season, the reservoir district Viswavakudi
பெரம்பலூர் மாவட்டத்தில் பருவத்தில் பெய்ய வேண்டிய மழை விசுவகுடி நீர்த்தேக்கம் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடி கல்லாறு ஒடையின் குறுக்கே பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார துறையின் மூலமாக செம்மலை, பச்சைமலை ஆகிய மலைகளின் இடையே மலைப்பகுதியில் பெய்யும் நீரை வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 36 அடி உயரம் மற்றும் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் கூடிய புதிய விசுவகுடி நீர்த்தேக்கம் 2015 ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இது பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரே நீர்த்தேக்கம். இந்த அணையானது 30.67 மில்லியன் கனஅடி நீரை 10.30 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் திறக்கப்பட்ட 2015 ம் ஆண்டு அதன் முழு கொள்ளளவை (33 அடி உயரம்) எட்டியது. அதன் பிறகு கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் போது 22 அடி உயரம் மட்டுமே தண்ணீர் நிரம்பியது. அதன் பிறகு கடந்த பல மாதங்களாக போதிய மழை பெய்யாததால் அணையிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வற்றி தற்போது வறண்டு காணப்படுகிறது.
மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிணற்று பாசனம் மூலம் பயிர் செய்யக்கூடிய விவசாயிகளும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது மானாவாரி நிலத்தில் பருத்தி, மக்காசோளம், ஆமணக்கு, துவரை போன்ற விதைகளை விதைப்பதற்காக பலர் தங்களது நிலங்களை உரமிட்டு உழவு செய்து தயார் நிலையில் மழைக்காக காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், காவிரிக் கரையோர மாவட்டங்களிலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் நிலையில், மத்திய மாவட்டமான பெரம்பலூரில் நீர்த்தேக்கம், ஏரி, மற்றும் குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடப்பது விவசாயிகளையும், பொதுமக்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.