பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் என இரு சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. தனித் தொகுதியாக பெரம்பலூரும், பொதுத் தொகுதியாக குன்னமும் உள்ளது.
அதில், அதிமுக சார்பில் ஆர்.டி.இராமச்சந்திரனும் (உடையார்), திமுக சார்பில் த.துரைராஜும் (உடையார்), தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, த.மாகா சார்பில் முகமது ஷானவாசும் (இஸ்லாமியர்), பா.ம.க., சார்பில் வைத்திலிங்கமும் (வன்னியர்), நாம் தமிழர் கட்சி சார்பில் அருள் (வன்னியர்), ஐ.ஜே.கே சார்பில் அசோகன் (உடையார்)
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில், ஐ.ஜே.கே.வில் போட்டியிடும் அசோகன், ஆர்.டி.இராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கட்சியின் தலைவர் பச்சமுத்து வந்த போது போதுமான அளவிற்கு கட்சியினருக்கு அழைப்பு கொடுத்து அதிக அளவு கூட்டம் கூட்டவில்லை என குறைபாடு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை ஐ.ஜே.கே கட்சியில் இருந்து விடுவிக்கப்படுவதாக வந்த தகவலை முன்னிட்டு அசோகன் நேற்றிரவு தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
வரும் சில நாட்களில் வாபஸ் பெறுவர் என கூறப்படுகிறது. வேட்பாளர் ஒருவரே கட்சி மாறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.