In Perambalur for use in the district permission to take free of silt in waters
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் இருந்து, விவசாய பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகத்திற்காக 10 டிராக்டர் வண்டல் மண் கட்டணம் இன்றி எடுத்து செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு அல்லது வீட்டு உபயோகத்திற்கு 10 டிராக்டர் சுமை அல்லது 30 கனமீட்டர் வண்டல் மண் எவ்வித கட்டணமின்றி பொதுமக்கள் எடுத்து செல்ல தமிழக அரசு தொழில்துறை அரசு ஆணை கடந்த ஆண்டு செப்டம்பர் 23–ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு இதழிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை நகல்
எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் வேளாண்மை அல்லது வீட்டு உபயோகத்திற்கு வண்டல் மண் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நிலத்தின் கணினி சிட்டா நகலுடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் இவற்றில் ஏதேனும் ஒரு சான்று நகலுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்து உரிய அனுமதியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.