in Perambalur regarding precautions to be taken during the northeast monsoon in the crowd

perambalur_dt_map பெரம்பலூர் : வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ளம் மற்றும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவிப்பதுடன், வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ள சேதங்களை தவிர்க்கும் பொருட்டு கோட்ட மற்றும் வட்ட அளவில் அனைத்து துறை சார்நிலை அலுவலர்களை கொண்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும்.

வெள்ளம் மற்றும் புயல் பாதித்த பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தகுதியான பள்ளிக்கட்டிடம், திருமண மண்டபம் அல்லது பொது கட்டிடங்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், மழைக் காலங்களில் காட்டாற்று வெள்ளத்தினால் பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டால், போக்குவரத்தினை சீர்செய்யும் பொருட்டு, தேவையான அளவு சாக்குபைகள், கயிறு மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

மேலும், கனமழை மற்றும் வெள்ள அபாய காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலை கடைகளில் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை தொய்வின்றி விநியோகிக்கும் பொருட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மழை வெள்ளம் போன்ற இடர்பாடுகளிலிருந்து பொதுமக்களை காத்திடும் பொருட்டு அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், அவசர உதவிக்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்தார். அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!