In Perambalur: Seminar in Chettikulam onion cultivation
பெரம்பலூர் : தோட்டக் கலைத் துறை சார்பில் நடத்தப்பட்ட வெங்காய சாகுபடி கருத்தரங்கில் ரூ.22.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஆதிநாட்டார் மண்டபத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான வெங்காய சாகுபடி கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்திற்கு தலைமையேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பசுமைக் குடில் அமைத்தல், திசு வாழை நடுதல், கல் பந்தல் அமைத்தல், வெங்காய சேமிப்பு அமைப்பு, நுண்ணீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 விவசாயிகளுக்கு ரூ, 22 லட்சத்து 98 ஆயிரத்து 710 மதிப்பிலான மானிய உதவித்தொகைகளுக்கான காசோலைகளையும், பணி ஆணைகளையும் நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளுக்கு வழங்கினர்.
முன்னதாக, தோட்டக் கலைத் துறை சார்பில் சின்னவெங்காயம், காய்கறிகள் மற்றும் நுண்ணீர்ப் பாசன செடிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சியினை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள் வெங்காய சாகுபடி முறை குறித்தும், அறுவடைக்குப் பின்னர் மதிப்புக் கூட்டல் மற்றும் விற்பனை குறித்த தொழில் நுட்ப உரைகளை வழங்கினர்.
கருத்தரங்கின் இரண்டாம் நாளான நாளை (செப்.11) காலை 10.30 மணிமுதல் விவசாயிகளின் கருத்துரைகள், நுண்ணீர்ப் பாசன திட்ட செயல் விளக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.