In Perambalur, the Collector inaugurated the police awareness rallies: SP went on a bike rally with a helmet!

     தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து போலீஸ் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியினை பாலக்கரையிலும், 300க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட பைக் பேரணியை கலெக்டர் அலுவலகத்திலும், கலெக்டர் கிரேஸ்,  போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

  ”விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை எய்திடும் வகையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு 01.01.2025 முதல் 31.01.2025 வரை மாவட்ட அளவிலான பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு தொடர்ந்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறையின் சார்பில் சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்தும், விபத்தினை தடுத்திடும் வகையில் எவ்வாறு பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை விளக்கிடும் வகையிலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

   அதனடிப்படையில், சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விளக்கிடும் வகையில்  பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இன்று மாவட்ட  போக்குவரத்து போலீசார் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணியில் சுமார் ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழ்நாட்டை படைப்போம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டாதீர், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டாதீர், பேருந்தில் படியில் நின்று பயணம் செய்யாதீர், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர், குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்காதீர் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றும்,  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கியும் பேரனியில் பங்கேற்றனர். இந்த பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் வரை சென்று  முடிவுற்றது.

இதேபோல, ஆட்சியர் அலுவலகம் முன்பு, போலீசார் பங்கேற்ற பைக் பேரணியினை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா ஹெல்மெட் அணிந்து போலீசாருடன் பைக் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேரணியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் சென்று 4-ரோடு மற்றும் 3-ரோடு வழியாக வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நிறைவுற்றது.

   கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) பாலமுருகன்,  மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ்,  டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிள்ளிவளவன் (ஹைவே ), மகேஷ் (டவுன்), சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெற்றிவேல், டிராபிக் போலீசார்கள் மற்றும்  தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!