Independent female councilor who bought about 1 km of land and built a road at her own expense to keep her election promise

தேர்தலின் போது அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை வெற்றி பெற்று வந்த பின்னர் மறந்து விடும் இந்த காலத்தில் பெரம்பலூர் அருகே சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர் ஒருவர் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை அரசின் உதவியை எதிர்பார்த்து காத்து இருக்காமல் தனது சொந்த பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைத்து வருவது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றியம் 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர் தமிழரசி. வாக்கு கேட்கும்போதே சாத்நத்தம் கிராம பொதுமக்கள் தங்கள் ஊரிலிருந்து விவசாய இடுப்பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கும் வேப்பூருக்கு நன்னை வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் குறுகிய நேரத்தில் செல்லும் வகையில் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் கவுன்சிலராக வெற்றிபெற்ற தமிழரசி அந்த மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனது சொந்த செலவில் சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார். அதற்காக சில விவசாயிகளிடம் தேவையான இடத்தை கிரையமாக பெற்று 20 அடி அகலத்தில் சுமார் ஒன்னேகால் கிலோ மீட்டருக்கு தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார்.

பணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் சாத்தநத்தம் கிராமமக்கள் 5 கிலோமீட்டர் பயணித்து வேப்பூர் செல்லும் நிலைமாறி தற்போது ஒருகிலோ மீட்டர் தூரத்திலே சென்றடையலாம். இதன் மூலம் அப்பகுதி மக்களில் சுமார் 100 ஆண்டுகள் நீண்டநாள் கனவான குறுக்குவழி சாலை அமைக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

விரைவில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சாலை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. அதனை வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை திறந்து வைத்தார்.

தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை தான் வெற்றி பெறுவதற்காக அள்ளி விடுவதும், தான் வெற்றி பெற்று வந்த பின்னர் அதை மறந்து விடுவதுமாக இருந்து வரும் இந்த காலத்தில் தேர்தலின் போது, தான் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை மறக்காமல் நினைவில் வைத்து அதற்காக அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனது சொந்த செலவில் 12லட்ச ரூபாய் செலவு செய்து சாலை அமைத்து வரும் இந்த ஒன்றியக்குழு உறுப்பினரின் செயல் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

இவரை முன் உதாரணமாகக் கொண்டு மற்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இது போன்று செயல்பட்டால் கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காணப்பட்டு மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்பதில் ஐயமில்லை.

முன்னதாக வழக்கறிஞர் ப.அருள் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றார். நன்னை முன்னாள் ஊராட்சித் தலைவர் பி.கந்தசாமி, சாத்தநத்தம் கிராம தர்மகர்த்தா ச.துரைசாமி, ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஓலைப்பாடி ஊராட்சித் தலைவர் தனம்பெரியசாமி, மருத்துவர் ப.சேசு உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கொடுத்த வாக்கை காப்பாற்றிய கவுன்சிலரை பாராட்டும் விதமாக சாத்தனத்தம் கிராம மக்கள் சார்பில், புடவை, பழம், பூ, மற்றும் மோதிரம் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!