Jayalalithaa memorials equal terminology corruption Ornament! PMK Ramadoss

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம்! ஊழலின் சின்னமாகவே பார்க்கப்படும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஊழலில் திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியை தமிழகத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து கவுரவப்படுத்துவது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு ஒப்பானது ஆகும்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவிருக்கும் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் நிகழ்த்தப்பட்ட செயல்கள் சகிக்க முடியாதவை. அடிக்கல் நாட்டு விழாவின் போது பூசைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், ஜெயலலிதா நினைவிட அடிக்கல் நாட்டு விழாவிற்காக மிகவும் பிரமாண்டமான முறையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, வேள்விகள் நடத்தப்பட்டுள்ளன. எத்தனை வேள்விகள் நடத்தினாலும், எத்தனை பட்டுத்துணிகளைப் போட்டு மூடி வைத்தாலும் நினைவு மண்டபம் கட்டப்படும் ஜெயலலிதாவின் ஊழல்களையும், ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களை கழுவ முடியாது; மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள வெறுப்பை அழிக்க முடியாது.

ரூ.50 கோடி ரூபாய் செலவில் 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் என்னென்ன சாதனைகள் பார்வைக்கு வைக்கப்படும் என்பது தான் தெரியவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஊழலுக்காக இரு முறை தண்டிக்கப்பட்டவர்; ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் இரு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்; ஊழலுக்காக தண்டிக்கப்பட்டதால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தவர்; தேர்தலில் போட்டியிடும் தகுதியை பறிகொடுத்தவர், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக அதிமுக தொண்டர்களை தூண்டி விட்டு கலவரம் செய்ய வைத்ததுடன், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அருகில் 3 அப்பாவி மாணவிகளை உயிருடன் எரித்து கொலை செய்ய வைத்தவர் ஆகியவை தான் ஜெயலலிதாவின் அளப்பரிய சாதனைகளில் முதன்மையாக அமையும். இவ்வரலாறு இனிவரும் தலைமுறை அறிய வேண்டியது தான்.

ஜெயலலிதா மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் பெங்களுர் பரப்பண அக்கிரகார சிறையில் சசிகலாவுடன் அடைக்கப்பட்டிருந்திருப்பார். இந்திய வரலாற்றில் எவரும் செலுத்தாத வகையில் ரூ.100 கோடி அபராதம் செலுத்தியிருந்திருப்பார். அப்படிப்பட்டவருக்கு ரூ.50 கோடியில் நினைவிடம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் ஊழல் சின்னமாகவே பொதுமக்கள் இதை பார்ப்பார்கள்.

ஜெயலலிதாவின் நினைவிடம் நேராக பார்க்க பீனிக்ஸ் பறவை போன்றும், கழுகுப் பார்வையில் பார்க்க இரட்டை இலை சின்னம் போன்றும் காட்சியளிக்கிறது. ஏற்கனவே எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வளாகத்தில் இரட்டை இலை சின்னம் வடிவில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. அதுகுறித்த சர்ச்சை எழுந்த போது அது ‘குதிரை றெக்கை’யின் நிழல் என்று விஞ்ஞானப்பூர்வமான விளக்கம் அளித்து தமிழக அரசு தப்பித்தது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாக இப்போது ஜெயலலிதா நினைவு மண்டபத்திலும் இரட்டை இலை திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் ஊழல்வாதி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதையும், அதில் இரட்டை இலையை அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியின் போது அரசு செலவில் யானை சிலைகள் அமைக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் காவிரிப் பிரச்சினை, நீட் தேர்வு சிக்கல், வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, அரசு ஊழியர்கள் பிரச்சினை என உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை’ என்ற பழமொழிக்கு இணங்க அந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டாத பினாமி அரசு, ஜெயலலிதாவுக்கு அவசரம், அவசரமாக நினைவிடம் அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதை அனுமதிக்க முடியாது.

முதலமைச்சராகவே பதவி வகித்திருந்தாலும் கூட ஊழல்வாதிக்கு, ஊழல் செய்ததற்காக தண்டிக்கப் பட்டவருக்கு நினைவிடம் அமைப்பதை எந்த சட்டமும், நீதிமன்றமும் அனுமதிப்பதில்லை. சட்டப்பேரவை மாடத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதைக் கூட சென்னை உயர்நீதிமன்றம் ஆதரிக்கவில்லை; மாறாக சட்டப்பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தான் கூறியிருந்தது. எனவே, வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்பம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!