Kala Utsav -2018 Competitions for Namakkal District School Education Department: Thousands of students participated
நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலா உத்சவ்-2018 போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் சார்பில் கலா உத்சவ்-2018 மாவட்ட அளவிலான போட்டிகள் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் பெரியண்ணன் முன்னிலை வகித்தார்.
கல்வி மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் வள்ளிமனோகரன் வரவேற்றார். விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ஊஷா தலைமை வகித்து போட்டிகளை துவக்கிவைத்து பேசியதாவது:
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம் மாவட்ட அளவிலான இசை, நடனம், நாடகம், காண் கலைகள் சார்ந்த கலா உத்சவ்-2018 போட்டிகள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. கலா உத்சவ் மனிதவள மேம்பாட்டுத் துறையின் புத்தாக்க திட்டமாகும். இத்திட்டமானது 2015 ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு கலா உத்சவ் திட்டத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் அணியாக இல்லாமல் தனித்தனியாக மாணவ, மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலும் பங்கேற்பார்கள்.
கடந்த வருடங்களில் நாமக்கல் மாவட்டம் மாநில மற்றும் தேசிய அளவில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்டு பல்வேறு பரிசுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளது என பேசினார். இதில் வாய்ப்பாட்டு, இசைக்கருவி, நடனம், ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இதில் எஸ்எஸ்ஏ உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், சிஇஓ பிஏ மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் சிஇஓ பிஏ குமார் நன்றி கூறினார்.