Kalaigar Urban Development Project: Perambalur, Kurumbalur, Collector Venkatapriya inspect!

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளை கலெக்டர் வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், லப்பைக்குடிக்காடு, பூலாம்பாடி உள்ளிட்ட பேரூராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்த பகுதிகளை ஆய்வு செய்த
கலெக்டர் தெரிவித்ததாவது:

தமிழக அரசு பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற ஒரு திட்டத்தினை துவக்கி வைத்து, அதன் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், குடிநீர் விநியோகம், சாலை வசதி, தெருவிளக்கு, மயானம், சமுதாய கூடம், நூலகம் மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தவும், பள்ளிக் கட்டிடங்கள், மருந்தகங்கள், நூலகங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் 4.00 மீட்டர் அகலத்தில், 1.205 கி.மீ. தொலைவிற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 3.35 மீட்டர் அகலத்தில் 0.392 கி.மீ. தொலைவிற்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி, 0.90 மீட்டர் அகலத்தில் 0.392 கி.மீ. தொலைவிற்கு வடிகால் அமைக்கும் பணி, ரூ.4.80 லட்சம் மதிப்பீட்டில் 5 சிறுபாலம் அமைக்கும் பணி, லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 3.50 மீட்டர் அகலத்தில் 0.949 கி.மீ. தொலைவிற்கு ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி, 0.395 கி.மீ. தொலைவிற்கு ரூ.9.85 மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, ரூ.3.95 லட்சம் மதிப்பீட்டில் 4 சிறுபாலம் அமைக்கும் பணி, பூலாம்பாடி பேரூராட்சியில் 3.75 மீட்டர் அகலத்தில் 2.997 கி.மீ. தொலைவிற்கு ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மயான சாலைக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்படவுள்ளது. மேலும் பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாக பகுதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கவும் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரசின் அனுமதி இப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மேலும் பல்வேறு அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் பாதாள சாக்கடை அடைப்புகளை மனிதர்கள் சுத்தம் செய்வதால் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடையினை சுத்தம் செய்ய வாங்கப்பட்டுள்ள புதிய ரோபோவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், உதவி செயற்பொறியாளர்(பேரூராட்சிகள்) ந.விஸ்வநாதன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தியாகராஜன்(குரும்பலூர்), சதீஸ்கிருஷ்ணன் (லப்பைக்குடிக்காடு), பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!