License for 214 people to shop for Diwali crackers; 35 petitions dismissed: Namakkal Collector
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு :
நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகைக்காக தற்காலிகமாக பட்டாசுக்கடை அமைத்து விற்பனை செய்ய இந்திய வெடிமருந்து சட்டத்தின் கீழ் லைசென்ஸ் கேட்டு 249 விண்ணப்பங்கள் வரப்பெற்றது.
விண்ணப்பங்கள் தொடர்பாக சப்-கலெக்டர், மாவட்ட எஸ்.பி., ஆர்டிஓ, மாவட்ட தீயணைப்பு அலுவலர், மற்றும் தாசில்தாரிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. இதில் தகுதியான 214 விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 35 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
பட்டாசு கடை வைப்பவர்கள் பட்டாசுக்களை கட்டு கட்டாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உதிரிகளாக விற்பனை செய்ய கூடாது. பட்டாசு வாங்குபவர்கள் கடைகளுக்கு வெளியே நின்றுதான் பட்டாசுகளை வாங்கவேண்டும்.
பட்டாசு வாங்குபவர்கள் கடைக்குள் சென்று பட்டாசுகளை தேர்வு செய்தல் கூடாது. பட்டாசு கடை முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தல் கீற்றுகளில் இருக்க கூடாது. தகரத்தில் தான் இருக்க வேண்டும். பட்டாசு கடைக்குள் தீ அணைப்பான்கள் இருக்க வேண்டும்.
பட்டாசு கடைக்கு முன்பு 200 லிட்டர் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். 10 மணல் வாளிகள் இருக்க வேண்டும். பட்டாசு கடைகளை ஒட்டி ஹோட்டல் கடை, டீ கடை இருக்க கூடாது. பட்டாசு கடைகளில் இருப்பு பதிவேடு அவசியம் இருக்க வேண்டும்.
பட்டாசு கடைக்கு உரிய அவசர வழியை எந்த நேரமும் விற்பனை செய்யும் போது திறந்து வைத்திருக்க வேண்டும். பட்டாசு கடைக்குள் பட்டாசுகளை தவிர வேறு எந்த பொருட்களும் இருக்க கூடாது.
பட்டாசுகளை திருமண மண்டபங்களில் வைத்துக்கொண்டு அந்த திருமண மண்டபத்திற்குள் பொதுமக்கள் உள்ளே சென்று வாங்குவது கூடாது.
ஏதாவது ஒரு பட்டாசு கடை லைசென்ஸ்தாரர் உரிய விதிகளை கடைபிடித்து விற்பனை செய்யவில்லை என்றால் நாமக்கல் மாவட்ட டிஆர்ஓவுக்கு 9445000910 என்ற தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம், என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.