Livestock Medical Examination Camp starts on 26th of this month: Namakkal Collector

நாமக்கல்லில் கால்நடைகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் வரும்
26ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 செப்டம்பர் 15ம் தேதி அன்று தொடங்கப்பட்ட இலவச கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்களில் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஒரு பயனாளிக்கு 4 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வீதமும் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 2011-12 முதல் 2017-18ம் ஆண்டு முடிய 10 கிராமங்களில் 500 பயனாளிகளுக்கு 500 கறவை பசுக்களும் மற்றும் 392 கிராமங்களில் 22 ஆயிரத்து 598 பயனாளிகளுக்கு 90 ஆயிரத்து 392 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

2011-12 முதல் 2017-18 ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆடுகளில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 953 குட்டிகள் ஈன்றது கண்டறியப்பட்டுள்ளது. இக்குட்டிகளின் விற்பனை மூலம் பயனாளிகளின் பொருளாதார நிலை மேன்மை அடைந்துள்ளது.

இத்திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்த பிறகு நன்கு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு தமிழ் புத்தாண்டு தினத்தில் பரிசுகளும் வழங்கப் பட்டுள்ளன.

இலவச கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள்,செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கறவை பசுக்களின் பால் உற்பத்தித் திறனை பெருக்கவும், கால்நடைகளின் எடையினை அதிகரிக்கவும் வரும் 26 மற்றும் 27ஆகிய நாட்களில் கறவைப் பசுக்களுக்கு, இனப்பெருக்க மருத்துவ பரிசோதனையும், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் நடைபெறுகிறது.

இலவச கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் மட்டும் அல்லாமல் அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!