பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீமதுரகாளியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா இன்று வெகுவிமர்சையாக நடந்தது.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்திள்ள எழுந்தருளி உள்ள ஸ்ரீமதுரகாளியம்மன் கோவில் தமிழகத்திலுள்ள அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
சிலப்பதிகார காப்பியத்தின் காவிய நாயகி கண்ணகி மதுரையை எரித்து விட்டு அமைதியின்றி இருந்த போது இவ்வாலயத்தில் வந்து அமையதியுற்றார் என்பதும் ஸ்ரீ மதுரகாளியம்மனே கண்ணகியாக வந்து மதுரையை எரித்து இவ்வாலய அம்மனாக மாறினாள் என்பதும் செவி வழி வரலாறு.
இத்தகு பெருமை வாய்ந்த புகழ்மிக்க இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருத்தேர் விழா சித்திரை மாதத்தில் நடப்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா இன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.
பூச்சொரிதல் விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வாகனங்களில் பூக்கள் மற்றும் மின் விளக்குகளால்அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகள் முன் மல்லிகை, முல்லை, ரோஜா என பல்வேறு வகையான பூக்கள் நிறைந்த கூடைகளுடன் மேளதாளங்கள் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடன கலை நிகழ்ச்சிகளுடன் ஏராளமான பொது மக்கள் ஊர்வலமாக வந்து இன்று அதிகாலை சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு சார்த்தி (தூவி) வழிபட்டனர்.
விழாவில் பெரம்பலூர், திருச்சி, சென்னை, கோவை, சேலம் உட்படதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.
இன்று பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியுள்ள சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா வரும் 26ந்தேதி நடைபெறவுள்ளது.