Mangkhut Storm, which caused heavy damage, moves towards southern China from the Philippines
பிலிப்பைன்சில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய மங்குட் புயல் வலுவாக ஹாங்காங் மற்றும் தெற்கு சீன பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. இதனால் மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.
மழை கொட்டியதால் ஆங்காங்கே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வினியோகம் தடைபட்டது. வீடுகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கிவிட்டுள்ளது. மலைப்பகுதி களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாகுபோ நகரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 2 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர்.
இவர்கள் தவிர பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
‘மங்குட்’ புயல் தாக்குதலில் ககாயன் மாகாண தலைநகர் துகுயகராபோ நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.மங்குட் 5-ம்பிரிவு புயல் என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது ‘ஹையான்’ புயல் போன்று அதிக திறன் கொண்டது. இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய புயல்களில் இது சக்தி வாய்ந்தது. பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்து வலுவாக மங்குட் புயல் தெற்கு சீன பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.