Mauritius Tamils authority in the country: finance minister sworn in!

மொரீசியஸ் நாட்டின் நிதி அமைச்சராக ரெங்கநாதன் பதவி ஏற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் போராளி சோசலிச இயக்கம் (Militant Socialist Movement) வெற்றி பெற்றதை அடுத்து, தமிழரான ரெங்கநாதன் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

இதற்கு முன்பு மொரீசியஸ் வங்கியின் தலைவராகவும், அந்நாட்டின் நிதிக்குழு தலைவராகவும் அவர் இருந்தார். (முன்பு 2004 – 2011 ஆண்டுகளில், மறைந்த ராதாகிருஷ்ணன் படையாட்சி அவர்கள், தென் ஆப்பிரிக்க நாட்டின் பொதுத்துறை, நிர்வாகத்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்)

மொரீசியஸ் தமிழர்கள் – முதல் தலைமுறை

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகீசியர்கள் மொரீசியஸ் தீவுகளை கண்டறிந்தனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு சென்றனர். அதன் பின்னர் 1715 ஆம் ஆண்டில் பிரஞ்சுக்காரர்கள் அதனை பிடித்தனர். அதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இருந்து தமிழர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழர்கள் தான் மொரீசியசின் முதன்மை பயிரான கரும்பு உற்பத்தியை அங்கு தொடங்கினார்கள்.

பின்னர் தொழில்நுட்ப பணிகளுக்காக தமிழர்கள் அங்கு சென்றனர். இவ்வாறாக, கடந்த 250 ஆண்டுகளாக தமிழர்கள் மொரீசியசில் வசிக்கின்றனர்.

மொரீசியஸ் தமிழர்கள் – இரண்டாம் தலைமுறை

ஆங்கிலேய அரசு 1833 ஆம் ஆண்டில் கருப்பின அடிமைமுறையை ஒழித்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் கரும்புத் தோட்டங்களில் கருப்பின அடிமைகள் வேலை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளை விட திறமையாக வேலை செய்பவர்களாகவும், மிகக்குறைந்த செலவில் கிடைக்கும் கூட்டமாகவும் இந்தியாவில் ஆட்கள் கிடைத்தனர்.

கரும்புத்தோட்ட முதலாளிகள், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர். 1834 ஆம் ஆண்டில் தொடங்கி 1933 ஆம் ஆண்டுவரையிலான காலத்தில் 11,39,034 இந்தியர்கள் தென் ஆப்பிரிக்கா, கரீபியத் தீவுகள், பீஜித்தீவுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவ்வாறு, மொரீசியஸ் தீவுக்கு 458,000 இந்தியர்கள் சென்றார்கள். அவர்களில் 1,15,000 பேர் சென்னை மாகாணத்திலிருந்து சென்றவர்கள் ஆகும். இவர்கள் மிகப்பெரும்பாலும் தமிழர்களே!


மொரீசியசின் இன்றைய சூழல்

இந்தியா, நேபாள நாட்டிற்கு அடுத்ததாக இந்து மதம் முதன்மை மதமாக உள்ள நாடு மொரீசியஸ் ஆகும். அங்குள்ள மக்களில் 49% இந்துக்கள் (கிறிஸ்தவர் 33%, இஸ்லாமியர் 17%). ஆனாலும், தமிழர்கள் தம்மை பொதுவாக இந்து என்று கூறாமல், தமிழர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர்.

மொரீசியஸ் பணத்தில் ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழ் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது. வட இந்திய கோவில்களில்கள் இருந்து தமிழர்களின் கோவில் தனித்து பார்க்கப்படுகிறது. முருகன் முதன்மை கடவுள் ஆகும். தீமிதி திருவிழாவும் காவடி தூக்குவதும் முதன்மை திருவிழாக்கள் ஆகும். பொங்கல் மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்கள் தேசிய விடுமுறையாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!