Minister Sivasankar handed over Rs. 43.76 lakhs worth of assistive devices to the needy Disabled.

பெரம்பலூர் முத்து கிருஷ்ணா மக்கள் மன்றத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் , மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம். சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு 234 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.43.76 இலட்சம் மதிப்பிலான 504 உதவி உபகரணங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காலை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.3,000 கோடி அளவில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, பெரம்பலூர் மாவட்டத்திலும் 983 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். இது மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முக்கிய நிகழ்ச்சி ஆகும்.

இரண்டு நிகழ்ச்சிகளும் சமுதாய முன்னேற்றத்திற்கான தேவையான சிறப்பான நிகழ்ச்சிகளாகும். இந்த இரண்டு முக்கிய துறைகளையும் உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் தான். தலைவர் கலைஞரின் வழியை பின்பற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சரும், தனி கவனம் செலுத்தி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு என அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அது உங்களுக்கெல்லாம் ஒரு உந்து சக்தியாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகிறது.

இன்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம் 504 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 43.76 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இது மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைப் போல இயல்பாக இயங்கிட உதவியாக இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்து பல உதவிகளை செய்து வருகிறது. மேலும் உங்களுக்கு தேவையான உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்புகள் வேண்டி அதிகமான கோரிக்கைகள் வருகிறது. உங்களுக்கு தனியார் துறையின் மூலம் வேலை வாய்ப்புகளும் கிடைக்க தேவையான உதவிகள் செய்யப்படும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள், அலிம்கோ நிறுவனத்தின் அலுவலர் ரவிசங்கர், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை(பெரம்பலூர்), கே.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!