Missing Perambalur businessman, body found in well: Police Identity Google G-Pay money transfer!
பெரம்பலூர் அருகே காணமல் போனதாக கருதப்பட்ட வியாபாரி, கொலை செய்யப்பட்டு கிணற்றில் கிடந்த உடலை போலீசார் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை ஜெகராம், அவரது மகன் பரத்குமார் @ பகடுராம் (35), பெரம்பலூர் வடக்குமாதவி ரோட்டில் உள்ள மல்லிகை நகரில் குடியிருந்து கொண்டு, அருகே இருவரும் ஸ்டீல் கடை நடத்தி வந்தனர். கடந்த 6ம் தேதி மாலை 8மணிக்கு பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற பகடுராம் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, பகடுராம் வங்கி கணக்கில் இருந்து கூகுள் ஜி-பே மூலம் பணம் பரிமாற்றம் நடந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதை கவனித்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அரியலூரை சேர்ந்த சஞ்சய்ரோசன் என்பவரது கணக்கை காட்டியது. அதில் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் பரிமாற்றம் செய்திருந்தனர். அவரை பிடித்து நடத்திய விசாரணையில் பெரம்பலூர் திருநகரை சேர்ந்த கார்த்திக், ஆலம்பாடி ரோட்டை சேர்ந்த கமல் (காய்கறி கூலி) என்ற இரு வாலிபர்கள் அனுப்பியதாக தெரிவித்தார்.
அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தாவது: கடந்த 6ம் தேதி, எளம்பலூர் உப்போடை அருகே கார்த்திக், கமல் இருவரும் சாலையின் ஓரத்தில் இருந்த பாலக்கட்டையில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பகடுராம் வந்த பைக் மோதுவது போல வந்துள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி தாக்கி கொண்டனர்.
அப்போது மது போதையில் இருந்த கார்த்திக், கமல் இருவரின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத பகடுராம் பைக்கை விட்டு விட்டு தப்பி ஓடினார். பைக்கை எடுத்து கொண்ட இருவரில் ஒருவன் துரத்த மற்றொருவன் தாக்கி கொண்டே பகடுராமை விரட்டினான். தாக்குதலில் நிலைக்குலைந்த பகடுராம் மன்னிக்கவும் கேட்டுக் கொண்ட நிலையில், மீண்டும் விடாமல் கட்டையால் தாக்கியதில் பகடுராம் மயக்க மடைந்தார்.
தாக்கிய வாலிபர்களில் ஒருவன் மீண்டும் பகடுராமின் பைக்கை எடுத்து சென்று மீண்டும் மது வாங்கி வந்து குடித்து விட்டு, மயக்கத்தில் கிடந்த பகடுராமை தண்ணீர் தெளித்து எழுப்பி உள்ளனர். மயக்கம் தெளிந்த பகடுராமிற்கும் இருவாலிபர்களுக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறில், பகடுராமை வாலிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து குத்தியதில், பகடுராம் உயிரிழந்தார். பின்னர், பகடுராமையும், அவரது பைக்கையும், வாலிபர்கள் தூக்கி சென்று அருகில் உள்ள கிணற்றில் போட்டு விட்டு தப்பி சென்றதாகவும், கூகுள் ஜி-பே பாஸ்வேர்டு மூலம் பணம் பரிவர்த்தனை செய்ததில் போலீசாரிடம் மாட்டிக் கொண்டதாக தெரிவித்தனர். பின்னர், போலீசாரிடம், கிணற்றை அடையாளம் காட்டினர்.
போலீசார் தீயணைப்பு மீட்பு படையினரின் உதவியுடன் இன்று மாலை, கிணற்றில் கிடந்த பகடுராமின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாய்த்தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருங்கால சமுதாயம் மது எனும் மாயஅரக்கன் பிடியில் சிக்கி சீரழிந்து வருவதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.