Namakkal Collector requested to celebrate Diwali without sound and air pollution

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

பொதுமக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வந்ததாக புராணங்களில் சொல்லப்படும் நரகாசுரனை அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில் தீபங்களுடன் தீபாவளியினை விமரிசையாக கொண்டாடிவருகின்றனர்.

தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதனால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையும், தொடர் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வகையில் பொது நல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது.

இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் ஆண்டுதோறும் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பட்டாசு தயாரிப்பாளர்கள் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தினை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஒலி அளவானது 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல்-க்கு அதிகமாக சப்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்திரவின்படி, இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும். தீபாவளி பண்டிகை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத்திருவிழா.

அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்களுடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளை மட்டுமே வெடித்து தீபாவளியினைக் கொண்டாடவும், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் கேட்டுக்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!