Posters banned from placing the Flex board Banners around Namakkal Rockfort! Breach action !!
நாமக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி பிளக்ஸ் போர்டு வைக்க மற்றும் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் அழகிய நாமக்கல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன், டிஎஸ்பி ராஜேந்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நாமக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி பிளக்ஸ் பேனர்களோ மற்றும் விளம்பர போஸ்டர்களோ ஒட்டக்கூடாது என கடந்த 2016ம் ஆண்டு ஆர்டிஓ தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் தீர்மானத்தை கடைபிடிக்காமல் தற்போது வரை பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இது நாமக்கல் நகரத்தின் அழகை சீர்குலைக்கிறது.
எனவே தற்போதைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இனி நாமக்கல் மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள ரோடுள் மற்றும் சுவர்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பிளக்ஸ் பேனர்கள் பறிமுதல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பார்க் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூராக வைக்கப்படும் கடைகள் போலீசார் மூலம் அப்புறப்படுத்தப்படும் என மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர், நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், நகர கூட்டுறவு வீடு கட்டுவோர் நலச்சங்க துணைத்தலைவர் பொரி சண்முகம், நகர அதிமுக துணை செயலாளர் நரசிம்மன், பொருளாளர் ராஜா மற்றும் பிளக்ஸ் பேனர் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.