Panguni Uttara Therottam at Perambalur Maragathavalli Udanurai Madana Gopalasamy Temple; It happened today!
பெரம்பலூர் மதன கோபாலசாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூரில், மரகதவல்லி தாயார் உடனுறை மதனகோபாலசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 15-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று வெண்ணெய்தாழி உற்சவமும், இரவு குதிரைவாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத மதனகோபாலசாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர், இன்று காலை 9 மணிக்கு சாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிந்தா… கோபாலா… என்ற பக்தி கோஷம் முழங்க தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் செக்கடித் தெரு, சஞ்சீவிராயன்கோவில் தெரு, தெற்குத்தெரு, அய்யப்பன் கோவில் வழியாக இழுத்து வந்தனர்.
தேரோட்டத்தின் போது வழிநெடுகிலும் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன், பொன்.நாராயணன் அய்யர் மற்றும் பட்டாச்சாரியார் குழுவினர் பொதுமக்களிடம் இருந்து சீர்வரிசைகளை ஏற்று சிறப்பு வழிபாட்டை நடத்தினர். பின்னர் தேர் 6 மணிக்கு கோவில் நிலையை வந்தடைகிறது. பின்பு தீர்த்தவாரியும், வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது..
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு நீர், மோர், பானகம், எலுமிச்சை சாறு, அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 10-ம் நாளான இன்று துவாதச ஆராதனமும், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை திருமஞ்சன உற்சவம், இரவு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலாவும், 20-ந்தேதி மட்டையடி விழா மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவம், 21ந்தேதி மஞ்சள் நீர் விடையாற்றி விழாவும் நடை பெற உள்ளது. ஏப்.24-ந்தேதி பெருமாள் ஏகாந்தசேவை நடக்கிறது.