பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவிதது இருப்பதாவது:
பெரம்பலூர்: நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147- பெரம்பலூர் (தனி), மற்றும் 148- குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் 638 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று அரசியல் கட்சிகளின் சார்பில் அமைக்கப்படும் பூத்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, வாக்குச் சாவடி மையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் அரசியல் கட்சிகளின் பூத் அமைக்கப்படக் கூடாது. ஒரு டேபிள் மற்றும் இரண்டு சேர்கள் மற்றுமே பயன்படுத்தப்பட வேண்டும். 10 x 10 அடி என்ற அளவில் பூத் இருக்கவேண்டும். முழுவதும் மூடிய நிலையில் இருக்கக்கூடாது.
மேலும் இத்தகைய பூத்களை அமைக்கும் முன்பே மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் ஒற்றைச்சாளர முறையில் அனுமதிவாங்கும் இடத்தில் அனுமதிபெற வேண்டும். பூத் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தின் எண் மற்றும் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
இந்த பூத்தில் 3 x 4 / 2 அடி என்ற அளவிளான ஒரே ஒரு பிளக்ஸ் பேனர் மட்டுமே வைக்க அனுமதி உண்டு.
இந்த பேனரில் வேட்பாளர் பெயர் மற்றும் கட்சியின் பெயர் மற்றும் அந்தக் கட்சிக்குப் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சின்னம் ஆகியவை மட்டுமே இடம் பெறவேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறி அமைக்கப்படும் பேனர்கள் தேர்தல் அலுவலர்களால் அகற்றப்படும். பூத்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். பூத் சிலிப்போ, டோக்கன்களோ, பொருட்களோ வழங்கப்படுவது கண்டறிப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.