Patients affected by coronavirus need to be isolated and ready for treatment; KMDK General Secretary E.R.Eswaran
கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை

கொரோனா பாதிப்பினுடைய அச்சம் உலக முழுவதும் பரவி தற்போது தமிழகத்திலும் அதிகமாகி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுடைய விழிப்புணர்வு பிரச்சாரம் சிறப்பாக இருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடைய ஆய்வும், செய்தியாளர்கள் சந்திப்பும் தேவையான விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காக எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நோய் பரவல் அதிகமாகி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அதை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 5000 படுக்கை வசதிகளாவது தயார்ப்படுத்தப்பட வேண்டும். உடனடியாக ஒன்று இரண்டு நாட்களுக்குள் 1000 படுக்கைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு தயாராக இருக்க வேண்டும். இப்போது இருக்கின்ற அரசு மருத்துவமனைகளோ, தனியார் மருத்துவமனைகளோ போதாது. தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு நோயாளிகளை படுக்க வைத்தாலே மற்ற நோயாளிகள் வெளியேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பாதிப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கும். மருத்துவமனைகளில் இருக்கின்ற மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளை அரசு நம்பி கொண்டிருந்தால் கடைசி நேரத்தில் தேவையான ஊழியர்கள் அங்கு இல்லாமல் போகலாம். மற்ற வியாதிகளுக்காக அனைத்து மருத்துவமனைகளுமே படுக்கைகள் நிரம்பி இருக்கிறது என்பது எதார்த்தம். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக்கூடங்களையோ அல்லது காலியாக இருக்கின்ற அரசு கட்டிடங்களையோ தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்த வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு கோவை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் கொடிசியா வளாகத்தில் இருக்கின்ற கட்டிடங்கள் அனைத்தையுமே தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். உடனடியாக 1000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். அந்த வளாகத்தை சுற்றி காவல்துறையை வைத்து யாரும் உள்ளே போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இப்போது இருக்கின்ற மருத்துவர்கள் அல்லாமல் இராணுவத்தில் பணியாற்றுகின்ற 10 மருத்துவர்களையாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கேட்டு பெற வேண்டும். இதுபோல தான் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை சீனாவில் அமைத்து கொரோனா வைரஸ் பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதைபோல ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தால்தான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். அதேபோல தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருக்கின்ற உறுப்பினர்களை இந்த தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் உதவி செய்வதற்கு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இவ்வளவு படுக்கை வசதி இருக்கிறது என்று ஒரு கணக்கை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தால் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் தடுமாற வேண்டி வரும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய தனியாருக்கு அனுமதி வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் கட்டணம் 4500 ரூபாய் வரை வசூலிக்கலாம் என்று அறிவித்திருப்பது தவிர்க்கப்பட வேண்டியது. அந்த கட்டணத்தை அரசே அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் ஆய்வகங்களுக்கு கொடுக்க வேண்டும். நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. நோய் பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் சந்தேகத்திற்குரியவர்களை வீட்டிலிருந்து வெளியே வராமல் தடுப்பதுதான் நோய் தடுப்பு முயற்சியாக இருக்கும். யாராவது தொற்று இருக்குமோ என்று சந்தேகப்பட்டால் தொலைபேசியிலே அழைத்து வீட்டில் இருந்தே இரத்த மாதிரிகளை கொடுக்க கூடிய வசதி செய்யப்பட வேண்டும். எந்த அளவிற்கு ஆய்வுகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துகிறோமோ அந்த அளவிற்குதான் நோய் பரவுவதை தடுக்க முடியும். நோய் தொற்று இருப்பது உறுதியானால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் இந்த நேரத்தில் மிகவும் அவசரம். சுகாதாரத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!