Perambalur: 2 arrested for bribery to pay municipal taxes; Police caught them red-handed!
பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு, வீட்டுவரி ரசீது போடுவதற்கு ரூ 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி ஆலம்பாடி சாலையில் வேல்முருகன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கான கட்டிட பணிகள் அனைத்தும் ஒப்பந்தகாரர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ்சந்திர போஸ் என்பவர் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த வீட்டிற்கு நகராட்சி மூலம் வரி ரசீது, போடுவதற்காக சுபாஷ் சந்திர போஸ் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள, வரி வசூல் மையத்தில், பணியாற்றும் பில் கலெக்டரான சிவக்குமாரை அணுகியுள்ளார். அதற்கு சிவகுமார் புதிதாக வீட்டு வரி ரசீது போடுவதற்காக தனக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத சுபாஷ் சந்திர போஸ், வீட்டின் உரிமையாளர் வேல்முருகனுடன், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமச்சந்திரா தலைமையிலான இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் படி, வேல்முருகன் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் இருவரும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நகராட்சி வரி வசூல் மையத்தில் சிவக்குமாரிடம், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளனர். இடைத்தரகர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் மூலம் லஞ்ச பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவகுமாரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் பில் கலெக்டர் சிவகுமார், மற்றும் இச்சம்பவத்தில் பணம் வாங்கிக் கொடுப்பதற்கு இடைத்தரகராக செயல்பட்ட ராமு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.