Perambalur: 2 rowdies arrested at gunpoint, their wives blockade the station in the middle of the night!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 2 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதாக, அவர்களுடைய மனைவிகள் உள்ளிட்ட மூவர் கைக்குழந்தைகளுடன் பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டதோடு திடீரென தங்களின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்- தேன்மொழி தம்பதியரின் மகன் பிருத்திகை வாசன்(27), மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்- மேகலை தம்பதியரின் மகன் சுபாஷ்(25). நண்பர்களான இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகமால் முசிறி அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் ஒன்றில் தலைமறைவாக குடும்பத்துடன் வசித்து வந்த பிருத்திகை வாசனையும், சுபாஷையும் பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் போலீசார் மாவு கட்டு போட்டு விடுவார்களோ! அல்லது என்கவுண்டர் செய்து விடுவார்களோ! என்ற பயத்தில், பிருத்திகை வாசனின் மனைவி ஷாலினி (24), இவரது தாய் தமிழரசி மற்றும் சுபாஷின் மனைவி ருக் ஷானா பர்வீன்(20), அவரது 3 மாத கைக் குழந்தை மகிழன் ஆகியோர் பெரம்பலூர் காவல் நிலையத்தை நேற்றிரவு 12.00 மணியளவில் முற்றுகையிட்டு, போலீசாரால் கைது செய்து அழைத்து வரப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், கை, கால்களை முறித்து மாவு கட்டோ அல்லது என்கவுண்டரோ செய்து விடக் கூடாது என்றும் முடிந்தால் எங்களது கணவர்களை உடனே விடுவித்து விடுங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறோம் என கண்ணீர் மல்க கதறி அழுது கெஞ்சினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் திலகவதி, நீங்கள் யார்? உங்கள் கணவர்களை எந்த ஊர் போலீசார் அழைத்து வந்தனர்? எதற்காக இங்கே வந்து இந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்தார். இதற்கிடையே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் -இன்ஸ்பெக்டர் பிச்சை மணி காவல் நிலையத்திற்கு எதார்த்தமாக வந்த நிலையில், கண்ணீர் மல்க கதறி அழுது கொண்டிருந்த பெண்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலைக் கண்டதும் அதனை லாவகமாக பறிமுதல் செய்ய முற்பட்டார்.
இதனை அறிந்த பிருத்திகைவாசனின் மனைவி ஷாலினி தனது கணவரை விடுவிக்காவிடில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என பெட்ரோல் கேனை திறந்து தள்ளுமுள்ளுவுக்கு இடையே தான் மீது ஊற்றிக் கொண்டு கதறினார். அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீரை ஊற்றி இருக்கையில் அமர வைப்பதற்கு முன் கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ரவுடிகளின் மனைவி மார்கள் உள்ளிட்ட 3 பெண்கள் போராட்டத்தில் ஈடுபடும் தகவலை அறிந்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பெரம்பலூர் டிஎஸ்பி.,பிரபு மூவரையும் அழைத்து விசாரித்து, இரவு நேரத்தில் இது போன்று செயலில் ஈடுபடக் கூடாது என்றும், ஒருவேளை போலீசார் உங்களது கணவர்களை அழைத்து வந்திருந்தால், உரிய விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்! அச்சமோ! கவலையோ! கொள்ளாதீர்கள் .
தற்போது இங்கிருந்து நீங்கள் பாதுகாப்பாக புறப்பட்டு வீட்டிற்குச் செல்லுங்கள், நாளை காலை (இன்று) காவல் நிலையத்திற்கு நேரில் வந்து, போலீசாரை சந்தித்து உங்களது கோரிக்கையை தெரிவியுங்கள் என ஆட்டோ ஒன்றைப் பிடித்து பேருந்து நிலையத்திற்கு மூவரையும் அனுப்பி வைத்தார். நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ரவுடிகளின் மனைவிமார்கள் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.