Perambalur: 20 years in prison for youth who kidnapped and sexually harassed student; Court verdict!
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் – பாலையூர், கருவியாப்பாட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் மணிகண்டன் (29). சிலை செய்யும் சிற்பியான இவர் கொளத்தூர் கிராமத்தில் தங்கி கோயில் சிலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம்தேதி அதே கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், மணிகண்டன் பள்ளி மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் மாணவிக்கு பாலியல் துன்புறுதலுக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், சிறை தண்டனை காலத்தை ஏகபோக காலத்தில் அதாவது 20 ஆண்டுகள் அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிபதி இந்திராணி தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி மணிகண்டனை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.