Perambalur: 3 temples were broken open and money was stolen: Police investigate!
பெரம்பலூர் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து, உண்டியலில் வைத்திருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை பாடாலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கண்ணப்பாடி கிராமத்தில் வடக்கு தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று பூட்டிவிட்டு சென்ற பூசாரி இன்று அதிகாலை வந்து கோவிலை திறக்க சென்றார். அப்போது கோவிலின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு கொள்ளையர்கள் விட்டு தடயங்களை சேகரித்ததோடு, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் அதே கிராமத்தில் தெற்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் கதவு பூட்டு உடைத்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை திருடி சென்றனர். அதிலிருந்த 2 ஆயிரம் பணத்தை திருடி எடுத்துச் சென்றனர். இதேபோல் புது அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கதவு பூட்டு உடைத்து மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த 2 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். 3 கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உண்டியல் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.