Perambalur: 50-year-old request; Minister Sivashankar grants housing land titles (Patta) to 100 people in Labbaikudikadu!

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 100 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெற்றுக் கொடுத்தார். இன்று, அதனை கலெக்டர் கிரேஸ் தலைமையில் வழங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

பட்டாக்களை வழங்கிய அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஒரு மகத்தான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைக்கு முதல் கட்ட தீர்வு காணப்பட்டுள்ளது.

லப்பைக்குடிக்காடு பேரூராட்சியைச் சேர்ந்தவர்கள், லப்பைக்குடிகாடு வீட்டுவசதி சங்கம் ஒன்றை ஏற்படுத்தி பதிவு செய்து, பெண்ணகோணம் (வடக்கு) கிராமத்தில் லப்பைக்குடிகாடு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கிரையம் மனைகளாகப் பிரித்து, ஜமாலியா நகர் என்று பெயரிடப்பட்ட பகுதியில் வீடு கட்டி வசித்து வருவதால், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சுமார் 50 ஆண்டு காலமாக கோரிக்கை வைக்கப்படுவதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் இப்பகுதி ஜமாத் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டோம். கலெக்டரை சந்திக்கும் போதெல்லாம் முதல் கோரிக்கையாக ஜமாலியா நகர் பகுதி மக்களுக்கு பட்டா கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைப்பேன். ஒரு நூல்கண்டில் ஏற்படும் சிக்கலை கண்டறிவது எப்படி சிரமமோ, அதே போன்ற சிரமம் தான் ஜமாலியா நகர் பகுதியில் இருந்தது. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தபோது, தாயுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், ஜமாலியா நகர் மக்களுக்கு மறுநில அளவை மற்றும் நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு 380 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பட்டாக்கள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.

அதனடிப்படையில் வருவாய்த்துறையினர், நில அளவைத் துறையினர் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தையடுத்து, 380 நபர்களில் முதல்கட்டமாக 100 நபர்களுக்கு இன்று வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள நபர்களுக்கும் விரைவில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக அனைத்து அலுவலர்களுக்கும் ஜமாலியா நகர் பொதுமக்களுடன் இணைந்து நானும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ஜமாலியா நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கிய பின்புதான், நான் எனது வாழ்க்கையில் மிகுந்த ஒரு மன நிம்மதியான நாளாக கருதுகிறேன்.

ஒரு அரசு எப்படி துரிதமாக செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அதற்கு உதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சரின் அரசு திகழ்கின்றது, பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் விழாக்களில் ஏறக்குறைய 10,000 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

லப்பைகுடிகாடு பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றுவேன். இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு மைதானம் பள்ளமாக உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் விளையாட்டு மைதானத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும், என பேசினார்.

பட்டாக்களைப் பெற்ற பயனாளிகள், 50 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினையை தீர்த்து வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனமார நன்றி தெரிவித்துக் கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, லப்பைக்குடிக்காடு பேரூராட்சித் தலைவர் ஜாஹீர் உசேன், வேப்பூர் முன்னாள் சேர்மன் அழகு. நீலமேகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!