தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யவும், தமிழ்நாட்டில் திறன்மிகுந்த தொழிலாளர்களின் தேவையினை ஈடு செய்யவும், தொழிற்பயிற்சி மையங்கள் அரசின் சார்பில் கூடுதலாக தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை, கருத்தில் கொண்டும் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் துவங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா 15.9.2015 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக இன்று துவக்கி வைத்தார்கள். இந்த தொழிற்பயிற்சி நிலையம் தற்காலிகமாக ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 125 மாணவர்களுடன் துவக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விடுதியுடன் கூடிய மாணாக்கர்களின் வகுப்பறை, பனிமணை மற்றும் அலுவலக கட்டிடங்களுக்காக ரூ.9.08 கோடியை தமிழக முதலமைச்சர் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து பெரம்பலூரில் 1 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் முதல் தளத்துடன், 5,400 சதுர அடி கட்டடபரப்பளவில், கூட்டரங்கம், உற்பத்தி பொருட்காட்சி மையம், அலுவலர் அறைகள், கணினி அறை, பயிற்சி அறை, உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகக் கட்டிடத்தினையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் ஆலத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்ததை தொடர்ந்து ஆலத்தூரில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ம.சந்திரகாசி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் ஆகியோர்களது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சகுந்தலா கோவிந்தன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் துரை, அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி. இராமச்சந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், ஆலத்தூர் ஒன்றியக் குழு தலைவர் வெண்ணிலா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.