Perambalur: Anbukaramgal project; Arun Nehru MP distributed identity cards!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதரவற்ற குழந்தைளுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் “அன்புக் கரங்கள்“ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் ந.மிருணாளினி, பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக மாதம் ரூ.2000 வழங்குவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நிதி அமைச்சர் 14.03.2025 அன்று வரவு-செலவு திட்ட உரையின் போது மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50 ஆயிரம் குடும்பங்களில், குழந்தைகள் தங்கள் 2 பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது என்றும், இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், இக்குழந்தைகளின் 13 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர, மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து “அன்புக்கரங்கள்” என்னும் திட்டத்தினை செயல்படுத்த முதற்கட்டமாக தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்திடமிருந்து தரவுகள் பெறப்பட்டு (TNeGA) கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிகுழு உறுப்பினர்கள் கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் மறு சரிபார்ப்பு அலுவலர் கொண்டு ஆய்வு மேற்கொண்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரால் சரிபார்க்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோப்பு சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இரு பெற்றோரை இழந்த குழந்தைகள் கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் உடல் ரீதியாவும். மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தால்). ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) பயன் பெற தகுதியுள்ள குழந்தைகளாக கருதப்படுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 71 பயனாளிகள் மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு பயன்படும் வகையில் மாதம் ரூ.2000 வழங்குவதற்கான அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் வழங்கினார்கள்.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!