Perambalur: Another truck collides with a broken-down truck near Mangalamedu; 2 people died!
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே அதிகாலை பழுதாகி சாலையோரம் நின்றிருந்த டாரஸ் லாரி மீது, மற்றொரு டாரஸ் லாரி மோதியதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகேயுள்ள வல்லாபுரம் பிரிவுசாலை அருகே இன்று சனிக்கிழமை அதிகாலை சென்றபோது, ஆந்திர மாநிலத்திலிருந்து தேனி நோக்கி கடப்பா கற்கள் சென்று பழுதாகி சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த டாரஸ் லாரி மீது மோதியது.
இதில், பருப்பு லோடு ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி ஓட்டுநர் விழுப்புரம் மாவட்டம், அவியூர் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் சசிக்குமார் (30), லாரி உதவியாளர் விழுப்புரம் மாவட்டம், சேபுரத்தை சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் (24) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த மங்கலமேடு போலீஸரார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாலிகண்டபுரம் கிராம உதவியாளர் பெரியசாமி அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாரஸ் லாரி ஓட்டுநர் ஆந்திர மாநிலம், அனந்தப்பூரை சேர்ந்த தின்னப்பா மகன் ராமன்னாவை (24) கைது செய்து மங்கலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.