Perambalur: At the Dhanalakshmi Srinivasan sugarcane mill, the farmers demand that the money be paid immediately!

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், விவசாய சங்கத் தலைவர் ராமராஜன் பேசுகையில் மக்காச்சோள பயிரில் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசுக்கு நன்றியும்,

ராஜீ: விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோளம் விதைப்பு செய்யும் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாவட்டத்தில் 18 நேரடி நெல்கொள்முதல் நிலையம் துவங்க பரிந்துரை செய்ததற்கும், குறிப்பாக கை.களத்தூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்தமைக்காக அரசுக்கு நன்றியும், ராஜா: போலி பத்திரப்பதிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,

நீலகண்டன்: சதாசிவ அணைக்கட்டு சீரமைக்க வேண்டுமெனவும், தண்ணீர் வற்றிய பின்பு வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டுமெனவும், தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு கரும்பிற்கான பணத்தை விரைவில் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

வரதராஜன்: அனைத்து பயிர்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும், சின்னமுட்லு அணை மறுசீராய்வு செய்திட வேண்டுமெனவும், ரமேஷ்: பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டுமெனவும், கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமெனவும்,

ராஜாசிதம்பரம்: விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டுமெனவும், சிறுகுடல் பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்க கட்டடம் அமைத்து தர வேண்டுமெனவும், செல்லதுரை: பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்கவும், மானியத்தில் வெங்காய கொட்டகை அதிகளவில் வழங்கவும், உலர்களம் அமைத்து தரவும், கண்ணபிரான்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரயில் சேவை கொண்டு வரவும், கோதாவரி – பாலாறு திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதற்கு நன்றியும்,

ரகு: பாடாலூர் பகுதியில் குவாரிகள் அதிகம் உள்ளதை தடுக்கவும், மணிவண்ணன்: மக்காச்சோளம் மற்றும் பருத்தி கொள்முதல் பணிகளில் எடை மோசடியை தடுத்திட நடவடிக்கை எடுக்கவும், பாலையூர் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புகளை சீரமைத்து தர வேண்டுமெனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனுக்குடன் பதில் அளிக்க அறிவுறுத்தியதோடு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குமாறு கூறியதன் பேரில், அனைத்து துறை அலுவலர்களும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளித்தனர். அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 பிப்ரவரி மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 10 மி.மீ., பெய்த மழையளவு 0.00 மி.மீ, ஆகும். 2025 பிப்ரவரி மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 26 மி.மீ., பெய்த மழையளவு 11.55 மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 0.660 மெ.டன்களும், சிறுதானியங்களில் 4.608 மெ.டன்களும், பயறு வகைகளில் 6.373 மெ.டன்களும், எண்ணெய்வித்து பயிர்களில் 8.472 மெ.டன்களும் இருப்பில் உள்ளது.

தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக் கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!