Perambalur: Awareness march on child safety; Collector inaugurates!

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த கல்லூரி மாணவியர்களின் விழிப்புணர்வு நடை பயண பேரணியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து தேசிய அளவிலான குழந்தைகள் தின விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த மாணவியர்கள் இலவச குழந்தைகள் உதவி மையத்தின் எண் 1098, குழந்தைகளின் வருமானம் சமுதாயத்தின் அவமானம், குழந்தைகளிடம் பாலின வன்முறை தண்டனைக்குரிய குற்றம், கொடுக்காதே! கொடுக்காதே! குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்காதே!, ஒன்றுபடுவோம் உறுதி ஏற்போம்! குழந்தைகளை பாதுகாப்போம், செய்யாதே, செய்யாதே, குழந்தை திருமணம் செய்யாதே, பெண்ணுக்கு திருமண வயது 18, போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்தும் உரக்க கோசமிட்டபடியே சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பேரணியானது பாலக்கரையில் தொடங்கி நகரின் முக்கிய சாலை வழியாக சென்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நிறைவுற்றது. பேரணியில் 250க்கும் மேற்பட்ட தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகள் இல்ல பணியாளர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் பங்கேற்ற மாணவியர்களிடம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக 1098 என்ற இலவச குழந்தைகள் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும், தெரிவித்தனர்.

இதில், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!