Perambalur: Bank officials have filed a complaint against a jewelry appraiser who illegally obtained additional loans on pawned jewelry!

பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றிய நகை மதிப்பீட்டாளர் ஒருவர் வாடிக்கையாளர்களின் நகையை அவர்களுக்கு தெரியாமலேயே கூடுதல் தொகைக்கு அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள சம்பவம் தற்போது மேலமாத்தூர் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலமாத்தூர், சீராநத்தம், எலந்தங்குழி, கூத்தூர், அல்லிநகரம்,  சின்ன வெண்மணி பெரியவெண்மணி, கரம்பிம் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள், கல்வி நிறுவனங்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்து நகைக்கடன் உள்ளிட்ட கணக்குகளை வைத்துள்ளனர். இந்நிலையில் வங்கியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளராக இருந்து வந்த ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுமுறையில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பணியை மேற்கொள்ள வங்கி நிர்வாகம் வேறொரு புதிய நகை மதிப்பீட்டாளரை பணியில் அமர்த்தியுள்ளது. அப்போது, நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் தங்களது நகை கடனுக்கு வட்டியை கட்டவும், நகையை திருப்பி வைக்கவும், மீட்கவும் வந்த போது, ஒரு வாடிக்கையாளர் ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி கட்ட கடன் அட்டையை அவரிடம் கொடுத்துள்ளார். நகை மதிப்பீட்டாளர் உங்களுடைய நகை கடன் மீது நீங்கள் ரூ.2 லட்சம் பெற்றுள்ளதால் அதற்கான வட்டியை செலுத்தி புதுப்பிக்குமாறு கூறினார். தான் வாங்கியது ஒரு லட்சம் மட்டும் தான் என்று வாடிக்கையாளர் நகை மதிப்பீட்டாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியதால், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து தங்களது நகை கடன் அட்டைகளை கொடுத்து சரிபார்த்து வருகின்றனர்.

மேலும், சுமார் ஆயிரம் நபருக்கு மேல் வங்கி கணக்கு வைத்திருக்கும் இந்த வங்கியில் வயதானவர்கள் ஆதரவற்றவர்கள், கேட்பதற்கு ஆள் இல்லாத நபர்களிடம் மட்டுமே பல லட்சம் ரூபாய்க்கு மேலாக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வங்கி நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து நகை கடனை பிரச்சனை இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு செய்து தரப்படும் என வங்கி தரப்பில் வாடிக்கையாளர்களிடம் பதில் தெரிவித்து வருகின்றனர். இதனால் வங்கியில் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வரும் வாடிக்கையாளர்களிடையே தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் செய்ததாக கூறப்பட்டாலும், குன்னம் போலீசாருக்கு இது குறித்த புகார் இன்னும் வரவில்லை தகவல்கள் வெளியாகி உள்ளன.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!