Perambalur: Bus catches fire after tire burst; 26 people fortunately escape alive!
சென்னையில் இருந்து தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு சென்றது. டிரைவர் செல்வம் என்பவர் ஆம்னி பஸ்சை 23 பயணிகளுடன் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 12.45 மணியளவில் பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. சின்னாறு அருகே சென்றுக் கொண்டிருந்த போது ஆம்னி பஸ்சின் இடது புறம் பின் பக்கம் டயர் திடீரென வெடித்தது சிதறியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இழுத்துச் சென்று நின்றது. மேலும், டயர் அதிவேகமாக வெடித்த நிலையில், டயரில் பொருத்தப்பட்டிருந்த டிஸ்க் சாலையில் உரசியதில் தீ உருவானதில் பஸ் எரியத் தொடங்கியது.
இதற்கிடையே டயர் வெடித்த சத்தம் கேட்டு, பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலரும் அலறி அடித்துக் கொண்டு பஸ்சை விட்டு உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.மேலும், ஆம்னி பஸ் ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திலகர்புரம் தெற்கு தெருவை சேர்ந்த அய்வர் ராஜா(50), நடத்துனரான சேரன்மாதேவி புதுக்குடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(20), மாற்று டிரைவரான அம்பாசமுத்திரம் அருகே உள்ள சுப்பிரமணியத்தை சேர்ந்த மகேஷ்(30), ஆகிய மூன்று பேரும் பேருந்தை உடனடியாக நிறுத்தியதோடு, பயணிகள் அனைவரையும் கீழே உடனடியாக இறங்கும்படி கூச்சலிட்டதோடு, தாங்களும் கீழே இறங்கி தீயை அணைக்க முற்பட்டனர் இருந்த போதிலும், பேருந்து முழுவதுமாக தீப்பற்றி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.
இதுகுறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு, விரைந்து சென்று தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் தீ பஸ் முழுவதுமாக பரவி பேருந்து முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த திடீர் சாலை விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை மங்களமேடு போலீசார் சீர் செய்ததை அடுத்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இச்சம்பாவம் இன்று அதிகாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.