Perambalur: Car crashes into tree; child killed, 4 injured.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் புளியமரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 1½ வயது குழந்தை பலியானது. 4 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை பனையூரை சேர்ந்தவர் பாலாஜி (46). இவரது மனைவி அனிதா (35). இவரது மகன் திருமலை ராஜன் (5). இவரது மகள் லியோ மிக்கா ஸ்ரீ (1½). இன்று காலை பாலாஜி தூத்துக்குடி மாவட்டம் முல்லைபட்டி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு, மனைவி, மகன், மகள், உறவினர் ஜெயமாலா (49) என்பவருடன் சென்னைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். காரை பாலாஜி ஓட்டினார். இன்று மதியம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியது. இதில் குழந்தை, லியோ மிக்கா ஸ்ரீ, படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலாஜி, அனிதா, திருமலை ராஜன், ஜெயமாலா ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து, காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497