Perambalur: Chithirai Chariot Festival at the Arulmigu Madhurakaliamman Temple in Siruvachur; a multitude of devotees pulled the chariot with devotional fervor!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தக் கோயிலின் சித்திரைத் திருவிழாவையொட்டி கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பூச்சொறிதல் விழாவில், பெரம்பலூர், பாடாலூர், அரும்பாவூர், மருவத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மதுரகாளியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஏப்.22 ஆம் தேதி பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, நாள்தோறும் இரவு யானை, குதிரை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் புதன்கிழமை இரவு வரை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, இன்று மே.7 காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. மதுர காளியம்மன் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சிறுவாச்சூர் கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடையும். இதில், பெரம்பலூர், அரியலூர், துறையூர், திருச்சி, கடலூர், நாமக்கல், சென்னை, கடலூர் உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மே.8 அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும், 9 ஆம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி விடையாற்றி உலாவும் விழாவும், மே.11 ஆம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையரும், தக்கருமான அருட்செல்வன், செயல் அலுவலர் அசனாம்பிகை மற்றும் பணியாளர்கள் , பூசாரிகள் செய்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497