Perambalur Collector appeals to the public to celebrate Deepavali in an accident-free and environmentally friendly manner
பெரம்பலூர் கலெக்டர் வெங்டப்பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நமது கலாச்சாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உச்சிநீதிமன்றம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யவேண்டும் எனவும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலிவுறுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையன்று காலை 6.00 முதல் 7.00 மணி வரையும், இரவு 7.00 முதல் 8.00 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6.00 முதல் 7.00 மணி வரையிலும், இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அறிவித்துள்ளது.
பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே, சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
எனவே, இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.
குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் பட்டாசு வெடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் என அதில், தெரிவித்துள்ளார்.