Perambalur: Collector donates water purifiers to 10 government women’s hostels from discretionary funds!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் கிரேஸ் தன் விருப்ப நிதியிலிருந்து 10 அரசு மகளிர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை, விடுதி காப்பாளினிகளிடம் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதிகளை கலெக்டர் மாதந்தோறும் ஆய்வு செய்த போது, பெரும்பாலான விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு விடுதிகளில் போதுமான அளவு குடிநீர் வழங்கப்படுகிறது. இருப்பினும் குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகள் மூலம் தூய்மையான குடிநீர் கிடைத்திட வழிவகை செய்திடுமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
மாணவ, மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்ற கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து முதற்கட்டமாக பூலாம்பாடி, எறையூர், குரும்பலூர், பெரம்பலூர், லாடபுரம் மற்றும் அம்மாபாளையம் ஆகிய 6 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவியர் விடுதிகளுக்கும், துங்கபுரம், வெண்பாவூர், செட்டிக்குளம் மற்றும் வேப்பூர் அரசு கல்லூரி ஆகிய 4 பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதிகளுக்கும் என 10 மாணவியர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை (RO) மாணவியர்களின் பயன்பாட்டுக்கு, விடுதி காப்பாளினிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வி.வாசுதேவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார், விடுதி காப்பாளினிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.