Perambalur: Collector orders police to visit hospitals daily to sign and ensure security!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், சார்பில் துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, முன்னிலையில் நடந்தது.
இக்கூட்டத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பேறுகால இறப்பு, எடை குறைந்த குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விரிவாக ஆய்வு செய்தார். மேலும், சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்படும் கண்ணொளிக் காப்போம் திட்டம், பள்ளி சிறார் நல்வாழ்வுத்திட்டம், வளர் இளம் பெண்களுக்கான நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும் அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலரிடமும் கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் எத்தனை உள்ளது, எத்தனை கேமராக்கள் இயங்கும் நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையினை ஒவ்வொரு வட்டார மருத்துவ அலுவலரும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
இரவு நேரங்களில் பணி புரியும் மருத்துவர்கள் செவிலியர் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் நிலையிலான காவலர்கள் இரவு நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்குள்ள பணியாளர்களிடம் உரையாடி பாதுகாப்பு தொடர்பாக அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். மேலும் அங்கு நிர்வகிக்கப்படும் வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.
தினந்தோறும் காவலர்கள் ஆய்வு செய்வதால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் உடனடியாக தெரியவரும். கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அல்லது இருந்தும் இயங்காத அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக அவற்றை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தினந்தோறும் காவலர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளை வந்து பார்வையிடுவார்கள். யாருக்கேனும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலோ அல்லது சமூக விரோதிகளால் பிரச்சனையோ ஏற்பட்டால் தயங்காமல் அவசர கால எண் 100க்கு பேசி தகவல் தெரிவியுங்கள். நீங்கள் அழைத்த அடுத்த 5 நிமிடத்திற்குள் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவார்கள், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப்குமார், பெரம்பலூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.