Perambalur: Collector walks with the public under the Let’s Walk and Get Well project!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுவர் பூங்கா அருகே, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்” கீழ் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நடை பயிற்சியாளர்களின் நடைப்பயணத்தை இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் கலெக்டர் நடைபயிற்சி மேற் கொள்வதன் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவியர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி கடந்த 04.11.2023 அன்று நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் சுகாதாரத்துறையின் மூலம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று இத்திட்டத்தின் மூலம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் தங்களது சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் இவைகளை பரிசோதனை செய்து கொள்ள மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றது.
இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுவர் பூங்கா அருகே நடைபெற்ற நடைபயிற்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நடைபயிற்சியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுவர் பூங்கா அருகில் தொடங்கி, விளையாட்டு மைதானம் வழியாக மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுப்பாதையை அடைந்து பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வளைவு வரை சென்று மீண்டும் சுற்றுப்பாதை வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை சென்று திரும்பி சிறுவர் பூங்காவை சென்றடைந்தது. இது சுமார் 8 கி.மீ தொலைவு ஆகும்.
மேலும், இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொது மக்களிடையே தினசரி நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதாகும். கடந்த சில ஆண்டுகளாகவே பொது மக்களிடையே உடற்பயிற்சியின்மை உணவு கட்டுப்பாட்டின்மை, உடல் உழைப்பு குறைவு ஆகியவை அதிகரித்துள்ளது. இதனால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரழிவு நோய், இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. . இதனை தடுக்கும் வகையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் தினசரி நடை பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, உடல் நலம் பெற தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு 2 இடங்களில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவிற்கான பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நடைப்பயிற்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.எம்.கீதா, இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.