Perambalur: Coupons Intended Solely for Purchasing Items Not Available at Home — Minister Sivasankar Clarifies During Campaign!

குன்னம் தொகுதிக்கு உட்ப்ட்ட அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் அமைச்சர் சிவசங்கர் மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ், திமுக, விசிக ஆதரவுடன் போட்டியிடுகின்ற எனக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களியுங்கள். நம்முடைய முதலமைச்சருடைய ஆட்சி தொடர வேண்டும், முதலமைச்சர் கொடுத்திருக்கின்ற திட்டங்கள் தொடர வேண்டும். இந்தியாவிலேயே மகளிர் உரிமைத் தொகை என்று நம்முடைய மகளிருக்கான மகத்தான திட்டத்தைக் கொடுத்திருப்பவர் நம்முடைய முதலமைச்சர் தான். இப்போ மாதம் ஆயிரம் கொடுக்கிற திட்டம், மீண்டும் ஆட்சியமைக்கிற நேரத்தில் இரண்டாயிரமாக கொடுக்க இருக்கிறார்.
அதேபோல நம்முடைய கிராமத்தில் இருக்கின்ற நம் ஏழை வீட்டுப் பிள்ளைகள் அவசியம் காலேஜ் படிக்கணும்கிறதுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் பெண் குழந்தைகளுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டத்தில கொடுக்கிறாரு, ஆண் பிள்ளைகளுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில கொடுக்கிறாரு. இந்த ஆயிரம் ரூபாய் என்பது ஆயிரத்து ஐந்நூறாக உயர்த்த இருக்கிறார், எல்லாரும் காலேஜ் படிக்கணும்கிறதுக்காக.
அதேபோல பள்ளியில் படிக்கிற பிள்ளைகள் காலையில் வெறும் வயிற்றோடு இருக்கக் கூடாதுன்னு காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இப்போ அஞ்சாம் வகுப்பு வரை இருப்பதை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்த இருக்கிறார்.
அதேபோல தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது எல்லோருக்கும் டிவி கொடுத்தார். இன்னைக்கு நம்முடைய முதலமைச்சர் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறார், ‘இல்லத்தரசி கூப்பன்’ அப்படிங்கிற கூப்பன் கொடுக்கப் போறார். எட்டாயிரம் ரூபாய் பெறுமானம் உள்ள கூப்பன் எல்லா வீட்டுக்கும். அந்தக் கூப்பனைக் கொடுத்து கடையில நமக்கு என்ன தேவையோ நம்ம வீட்டுக்கு – டிவியோ, மிக்ஸியோ, பிரிட்ஜோ, கிரைண்டரோ நமக்கு என்னவோ தேவையோ அதை வாங்கிக்கலாம். ஏன்னா அரசாங்கம் ஒரு பொருளைக் கொடுத்தா ஏற்கனவே அந்தப் பொருள் நம்ம வீட்ல இருந்தா அது புண்ணியம் இல்லை. அதனால நமக்கு வீட்ல இல்லாத பொருளை வாங்கிக் கொள்வதற்கு இந்தச் சிறப்பான திட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.
அவருடைய ஆட்சி தொடர வேண்டும். இங்கே நம்முடைய கிராமத்திற்கான கோரிக்கையாக : சிவராமபுரம் புதிய காலனியில சிமெண்ட் சாலை அமைத்துத் தர வேண்டும், மயானப் பாதையிலிருந்து மாரியம்மன் கோயில் சந்துத் தெருவில் செல்லும் பாதை வரை தார் சாலை அமைத்துத் தர வேண்டும். சமுதாயக் கூடம் கட்டித் தருமாறும், குடியிருப்பு பகுதிகளில் குடிநீர்த் தொட்டி கட்டித் தருமாறும், சின்னாற்றங்கரை வரை செல்லும் மயானப் பாதையை தார் சாலையாக அமைத்துத் தரவும், அருந்ததியர் மயானப் பாதை செல்லும் வழிகளில் சிமெண்ட் ரோடு மற்றும் கல்வெட்டு அமைக்கவும், மாரியம்மன் கோயிலிலிருந்து தங்கவேல் வீடு வரை சிமெண்ட் சாலை மற்றும் கல்வெட்டு அமைத்துத் தர ஏழு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, நம்முடைய கிராமத்திற்கு ரேஷன் கடை பிரித்துக் கொடுத்ததிலிருந்து, தெருச் சாலைகள் அமைத்தது, இந்த மெயின் ரோடு அமைத்தது எல்லாம் நம்முடைய ஆட்சியில் தான் ஒவ்வொரு முறையும் வரும்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த கோரிக்கைகளும் நிச்சயமாக உங்களுக்கு நிறைவேற்றித் தருவேன் என்ற அந்த உறுதியை அளித்து, இந்த வெயில் நேரத்திலும் கூடி நின்று வரவேற்பு கொடுத்திருக்கின்ற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, நன்றி வணக்கம்.” என பேசினார்.
பின்னர், பி.டி.ஐ நிறுவனத்திற்கு அமைச்சர் அளித்த பேட்டியில், மக்கள் ஒவ்வொரு தேர்தலில் தோல்வியை கொடுத்து பாஜகவிற்கு பாடம் கற்பிக்கிறார்கள் என தெரிவித்தார்.
நிண்ணியூர், நக்கம்பாடி, சொக்கநாதபுரம், நமங்குணம், பாலையூர், பழமலைநாதபுரம், ந.குடிக்காடு, சிவராமபுரம், சன்னாசிநல்லூர், த.கூடலூர், ஈச்சங்காடு, சிலுப்பனூர், சேந்தமங்கலம், மதுராநகர், செங்கமேடு, தளவாய், முல்லையூர், அயன்தத்தனூர், வங்காரம், மாராக்குறிச்சி, இருங்களாக்குறிச்சி, மணக்குடையான், தாமரைப்பூண்டி, புதுப்பாளையம், சின்னமேலக்குடிக்காடு, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, முதுகுளம், தெத்தேரி, ஆலத்தியூர், கோட்டைக்காடு பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் தம்பி செங்குட்டுவன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்ப்பற்ற கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497