Perambalur: Court boycott protest against the Advocates Act Amendment Bill!
பெரம்பலூர், பிப். 26: மத்திய அரசு கொண்டுவர உள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூரில் நேற்று, பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம், சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில் நடந்தது. அச்சங்கத்தின் செயலாளர் சேகர், பொருளாளர் சிவராமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கும் வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதா வழக்கறிஞர்களின் நலனுக்கு எதிராகவும், வழக்கறிஞர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தலாகவும், ஒட்டு மொத்த வழக்கறிஞர்களின் உரிமையை பாதிக்கின்ற வகையிலும் இருப்பதால், அந்த சட்டமசோதாவை திரும்பபெற வலியுறுத்தும் வகையில், இன்று முதல் வரும் மார்ச் -1ஆம் தேதி சனிக்கிழமை வரை அச்சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னத்தில் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும், பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன்படி, இன்று முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நீதி மன்றத்தின் பணிகள் பாதிப்படைந்துள்ளது.