Perambalur district collector’s Surprise Visit in government hospital
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ளள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் நகராட்சியில் டெங்கு கொசுப்புழுக்களை உருவாகாமல் கட்டுப்படுத்த நகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்குத்தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பனிமலர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்றும், சுற்றுப்புறங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டாராம்.
அங்கு மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகள் மற்றும் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு ஏதேனும் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளதா என்றும் ஆய்வு செய்து, கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு அளிக்காமல் பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்து கொசு உற்பத்தியாகாத வகையில் பள்ளி வளாகங்களை பராமரிக்க வேண்டும் என்றும், மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று உரிய சிகிச்சை கொடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் நேரடியாகச் சென்று திடீராய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் மருத்துவர்கள் உரிய நேரத்தில் சுழற்சி முறையில் வருகிறார்களா என்றும், நல்ல முறையில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.சம்பத், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.