Perambalur: District-level Violence Prevention Awareness and Monitoring Committee quarterly meeting!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான வன்கொடுமைத் தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் கிரேஸ் தலைமையில் நடந்தது. போலீஸ் எஸ்.பி ஆதர்ஸ் பசேரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் வன்கொடுமை தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்புடைய அலுவலர்கள் வழக்குகளை தீர்த்து வைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து தீருதவி மற்றும் இதர நிவாரணங்களையும், அவர்களுக்கான அனைத்து சான்றுகளையும், பெற்று வழங்கிட தேவையான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களை குழு உறுப்பினர்களுடன் நடத்திட வேண்டும். வன்கொடுமை வழக்குகள் தொடர்பான அரசு நலத்திட்ட உதவிகளை காலதாமதமின்றி அவ்வபோது வழங்கிடவும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான வீட்டு மனை, சாதி மற்றும் இதர சான்றுகளை காலதாமதமின்றி வழங்கிடவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்வரும் 29.03.2025 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெறும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர மாணாக்கர்களுக்கான கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் இம்மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பபட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வி.வாசுதேவன், தாட்கோ மாவட்ட மேலாளர் க.கவியரசு, துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிராஜ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.